தாத்தாவின் மரணம் (உரையாடல் சிறுகதைப்போட்டிக்காக)
இக்கதை 'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது
தாத்தாவின் மரணம்
தட் தட் என்று கதவு தட்டும் ஓசை ஆழ்ந்த உறக்கத்தினூடே கேட்டது, தொடர்ந்து கதவை உலுக்கத் தொடங்கியிருந்தார்கள். கடுமையான துக்கத்தோடும் கையறுநிலையோடும் சற்றுமுன்புதான் உறங்கியிருந்தேன். என்ன இந்த நேரத்துல ஏதேனும் விபரீதமாக இருக்குமோ மனம் திக்கென்றிருந்தது. பழைய கதவென்பதால் தாழிடாமல் வைத்திருப்பது வழக்கம். மணமானவர்கள் மட்டுமே படுத்திருக்கும் அறையென்பதால் யாரும் சட்டென்று உள்ளே வந்துவிடமாட்டார்கள். இரண்டு மூன்றுதடவை தட்டிவிட்டு விழித்துக்கொண்டுவிட்டவர்களின் குரல் கேட்ட பிறகுதான் வருவார்கள். யாருக்காவது ஒடம்பு கிடம்பு சரியில்லையா, யாராவது கிணத்தடியில வழுக்கி விழுந்துட்டாங்களா...இல்ல புள்ளக்கி முடியாம போயிருச்சோ...மனம் அசுரவேகத்தில் கலக்கத்துடன் யோசிக்கத்தொடங்கியிருந்தது. நடுக்கூடத்தில் சலசலப்பு கேட்டுக்கொண்டேயிருந்தது. அருகில் அலங்கோலமாய்ப் படுத்திருக்கும் ஹரிணியோ பூகம்பம் வந்தாலும் எழுந்திருக்க மாட்டாள். மாட்டை அடிப்பது போல அடித்துத்தான் எழுப்பவேண்டும். அரைகுறையான விழிப்பில் எழுந்து கதவைத்திறக்க எண்ணிக்கொண்டிருக்கையில் கதவைத் தடாரென்று தள்ளிக்கொண்டு யாரோ உள்ளே வந்தார்கள். முழுதாய் கண்விழித்துப் பார்ப்பதற்குள் “அண்ணே தாத்தா தவறிட்டாங்க” தம்பி வாசுவின் குரல். பேரதிர்ச்சியில் திடுக்கிட்டு எழுந்தேன்.
“எப்போ?”
“இப்பத்தான் நாகப்படத்துலேர்ந்து போன் வந்திச்சி”
நெஞ்சு திடுதிடுவென்று நடுங்கத்தொடங்கியது. என்ன சொல்வது என்ன செய்வதென்று ஒன்றும் புரியவில்லை. நாளை பயணம் புறப்படவேண்டுமே அதை என்ன செய்வது என்று பல்வேறு குழப்பங்கள் ஓடிக்கொண்டிருந்தது. வெளியே வந்தேன், அப்பா நின்றுகொண்டிருந்தார். அம்மா, தங்கச்சி, அத்தை யெல்லாரும் உள்கூடத்தில் கதறிஅழுதுகொண்டிருந்தார்கள். குழந்தைகள் பாயிலிருந்து உருண்டு தரையில் தூங்கிக்கிடந்தார்கள். பாயின் மூத்திர நெடி நாசியில் கடுத்தது.
”என்ன செஞ்சிச்சாம்?”
”நேத்து காலைலேர்ந்து காய்ச்சலா இருந்திருக்கு, அறந்தாங்கி போய் காட்டிட்டு வந்திருக்கா... தானா நடந்துபோயிதான் காட்டிட்டு வந்திருக்கா...ராத்திரி படுத்திருக்கையில எந்திரிச்சி...ஒண்டுக்குப் போயிட்டு வந்து கொஞ்சம் தண்ணி வேங்கி குடிச்சிருக்கா.. நெஞ்சி வலிக்கிது கொஞ்சம் தடவி விடுமான்னு ஷோபாட்ட சொல்லியிருக்கா. அப்பத்தாவும், காலை அமிக்கிகிட்டு இருந்திருக்கா.. அப்பவே கொஞ்ச நேரத்துல ....” கலங்கிய கண்களோடு தடுமாறித்தடுமாறி அப்பா சொல்லிக்கொண்டிருந்தார். தனது தந்தையின் மரணம் பத்திக்கேள்விப்பட்ட அப்பாவின் மனம் எப்படியிருக்குமோ யோசிக்கத்தொடங்கினேன். அப்பாவின் முகம் பார்க்க தைரியம் வரவில்லை. 52 வருடமாய் தாத்தாவுடனே வாழ்ந்துவந்த அப்பத்தாவின் மனம் எப்படியிருக்கும், உயிர் பிரிவதை அருகே இருந்து பார்த்துக்கொண்டிருக்கும்போது எப்படி இருந்திருக்கும். குபுக்கென்று அழுகை முட்டியது.
நான் பிறந்ததிலிருந்து குடும்பத்தில் நிகழ்ந்த முதல் மரணம். இந்த எண்ணமே மேலும் மேலும் துக்கத்தையும் அதிர்வையும் ஏற்படுத்திக்கொண்டிருந்தது. யாருடைய முகங்களையும் பார்க்கவியலாமல் வெளியே வந்தேன். அவ்விரவிலும் நாகையிலிருந்து சொந்தக்காரங்கள் எல்லாம் மெட்டாடர் வேன் எடுத்துக்கொண்டு வந்து அழுது ஒப்பாரிவைத்துக் கொண்டே இறங்கினார்கள். நள்ளிரவின் நிசப்தத்தைக் குலைத்த அழுகுரல்களைக் கேட்டு எதிர் வீட்டிலும், அக்கம் பக்கத்திலும் சட் சட்டென்று வாசல் விளக்கு எரிந்தது. கலைந்த தூக்கத்தோடும், மெலிதான அதிர்ச்சியோடும் எதிர்வீட்டு தமிழாசிரியர் காரணத்தை வினவினார். மரணச்செய்தி கேட்டு, ”என்னாச்சி நல்லாத்தானே இருந்தாங்க, போன மாசம் கூட கடத்தெருவில என்கிட்ட பேசிக்கிட்டிருந்தாங்க” என்றவாரு அவரும் பங்கெடுத்துக்கொண்டார்.
“நீங்கள்ளாம் ரமேசோட கார்ல வந்துருங்க , ”நாங்க பொம்புளைங்க எல்லாம் வேன்ல வந்துர்ரோம்” - மாமா வாசுவிடம் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.
நீடாமங்கலம் போயி பட்டுக்கோட்டை போனாத்தான் சீக்கிரம் போவலாம், ரோடும் நல்லாருக்கும் அத்தை பையன் ஜீவா சொல்லிக்கொண்டிருந்தான். நான், பாஸ்கர், ரமேஷ், ஜீவா, எனது நண்பன் சபீர் காரில் நீடாமங்கலம் நோக்கி புறப்பட்டோம். ரமேஷ் ஜீவாவின் அக்காளின் கணவன். ஒரு பழைய காரை சொந்தமாக வாங்கி வாடகைக்கு ஓட்டிக்கொண்டிருந்தான். பெரும்பாலும் தள்ளிக்கொண்டிருந்தான் என ஜீவா ஜோக்கடித்துக்கொண்டிருப்பான். கார் ஒன்னு சொந்தமா இருக்கிறது எவ்ளோ நல்லாதாப்போச்சி என்று அப்போது சொல்லி பெருமிதப்பட்டுக்கொண்டிருந்தான்.
நள்ளிரவின் நிசப்தமும் தூரத்தில் கேட்ட இடி முழக்கமும் திகிலை அதிகப்படுத்திக்கொண்டிருந்தது. காரின் ஹெட்லைட் வெளிச்சத்தில் சிறு சிறு பூச்சிகள் தெரிந்து மறைந்தது.
“என்ன மச்சான் ஒங்க காரு சும்மா பறக்குது, இது இவ்ளோ வேகமா போகும்னு இப்பத்தான் தெரிஞ்சிக்கிட்டேன், பாஸ்கர் கார் முன்னாடி நல்லா பாத்துக்கிட்டே வா டயர் ஏதும் உருண்டு ஓடுதான்னு” விகல்பமில்லாமல் நக்கலடித்துக்கொண்டிருந்தான் ஜீவா. தாத்தாவுக்கு இவனும் பேரன் தானே இவனுக்கு எந்த துக்கமும் இல்லையோ என்று வியப்பாய் யோசித்துக்கொண்டிருந்தேன்.
தாத்தாவுடனான எனது அனுபவத்தின் நினைவுகள் யாவும் அவ்வளவு சுமுகமானதாக இருந்ததில்லை. சிறுவயதில் தாத்தாவின் ராணுவ கண்டிப்பில் வளர்ந்தேன், அருகில் அமர்ந்து கதைகேட்டதோ உணவுண்டதாகவோ நினைவில் இல்லை. ரொம்ப கௌரவம் பார்த்து நடப்பவர் தாத்தா, நானோ புதுமையின் புத்திரன் (அப்படித்தான் என்னைப்பற்றி நானே நினைத்துக்கொண்டிருந்தேன்). மடிப்பு கலையாமல் உடையுடுத்தக்கூடியவர். நான் மௌனமாகவே தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தேன். மனம் தாத்தாவுடனான நினைவுகளை அசுரவேகத்தில் மாற்றி மாற்றி சீட்டுக் கலைவது போல் விரித்துப் போட்டு அடுக்கிக்கொண்டிருந்தது.
மரணம் இத்தனைக்கோடி மனிதர்களையும் எங்கே கொண்டு போய் ஒளித்துவைக்கிறது? உடல்களைப் புதைத்தோ எரித்தோ விடலாம். அவர்களின் நினைவுகளை எங்கே கொண்டு சேமிக்கிறது. மனம் கேள்விகளைக் கொட்டியது. இதோ 82 வயதான தாத்தாவின் அனுபவங்களையும், நினைவுகளையும், அவரோடு மட்டுமே மறைந்து போன ரகசியங்களையும், என்ன செய்யும்?
விடுமுறையில் ஊரிலிருக்கும் போது வெளியே சுத்திவிட்டு இரவு பதினொன்னு, பண்ணெண்டு மணிக்குத்தான் வீட்டுக்கு வருவேன். கொல்லைவாசல் கதவு நாதாங்கி போடாமல் தொறந்தே இருக்கும். சப்தமில்லாமல் கதவைத்திறந்து கொண்டு வருவேன். சுருட்டு வாசனை மெலிதாகப்படர்ந்திருக்கும். தாத்தா வீட்டோடு இருந்த கொல்லையில்தான் காத்துக்காக கயித்துக்கட்டிலில் படுத்திருப்பார். மழைக்காலங்களில் மட்டுமே உள்ளே படுப்பார். அன்று அவரைக்கடந்து ஓசைப்படாமல் நடந்து செல்கையில் சற்று நின்று உற்றுக்கவனித்தேன். மரணமடைந்தவர் போல் தோன்றியது. பயம் கவ்விக்கொள்ள தலையைச்சிலுப்பி சே என்ன இது? இப்படி ஒரு நினைப்பு வர வீட்டினுள் சென்றுவிட்டேன்.
இரண்டு நாளைக்கு முன்னர் பயணம் சொல்லிவிட்டுச் செல்ல சிவகங்கையில் இருக்கும் அத்தைவீட்டுக்குச் சென்றிருந்தோம். தாத்தாவும் நானும் காரில் அருகருகே அமர்ந்திருந்தோம். வழியெங்கும் சீட்டில் தலை சாய்த்து உறங்கிக்கொண்டே வந்தார், பக்கவாட்டில் திரும்பிப்பார்க்கையில் மரணமடைந்துவிட்டவரின் அருகில் அமர்ந்திருப்பதைப்போல பிரமை தோன்றியிருந்தது. சே...எண்ணங்களைச் சிலுப்பி கவனத்தை திருப்ப வெளியே பார்த்துக்கொண்டே சென்றேன். ஏன் ஒவ்வொரு முறையும் எனக்கு தாத்தா மரணமடைந்துவிட்டதைப்போலவே தோன்றியது? ஏன் இப்போதெல்லாம் இப்படி தோன்றுகிறது என வியப்பாகவே இருந்தது. ஏதும் விசேசமான சக்தி நமக்கு வந்துவிட்டதா என்ன? குழப்பங்களில் ஆழ்ந்திருந்தேன்.
பொழுது விடிந்து நிலம் தெரியத்தொடங்குகையில் கார் பட்டுக்கோட்டையைத் தாண்டிக்கொண்டிருந்தது. மெலிதாக மழை பெய்து கொண்டிருந்தது. பெரிய பாலத்தருகே வண்டியை நிறுத்தி சிறுநீர் கழிக்க இறங்கினோம். நானும் நண்பனும் மச்சானுக்குத் தெரியாமல் சிகரெட் பிடிப்பதற்காக பாலத்தின் சுவற்றினோரம் சிறுநீர் கழிப்பதைப்போல் பதுங்கினோம். தூக்கம்விழித்த கண்களோடு, துக்கமும், சேர்ந்து எப்படி இனி வரும் நிமிடங்களை கடப்பது? அழுதுகொண்டிருக்கும் எல்லோரையும் எப்படி பார்ப்பது? நாமும் அழுதுவிடுவோமா? அடக்கிக்கொள்வோமா? அப்பத்தாவின் துயரத்தை எப்படி எதிர்கொள்வது? என்ன பேசுவது? என்னென்னமோ யோசித்துக்கொண்டே வந்தேன்.
“உனக்கு துக்கமா இருக்கா?” புகையை இழுத்துக்கொண்டே நண்பன் கேட்டான்.
“இல்ல, ஆனா எல்லாரையும் அந்தச்சூழல்ல எப்படி எதிர்கொள்றதுன்னு தெரியல”
மனமும் வானமும் ஒன்றே போல் ஆகிவிட்டது மாதிரி கருமேகங்கள் திரண்டு மெல்ல விசும்பிக்கொண்டிருந்தது.
“இப்ப இந்த வானம் இருக்கிற மாதிரித்தான் மனசு இருக்கு” என்றேன்.
“எப்புடிப்பா இந்த மாதிரி நேரத்துல கூட இப்டி செயற்கையா ஒளற முடியுது? என்று சிரித்துக்கொண்டே கேட்டான்.
”எனக்கு அப்டித்தான் தோணுது, வேற எப்டி சொல்றதுன்னு தெரியல... ”என்றேன்
ஊர் சென்று சேர்ந்து, வீட்டை நெருங்குகையில் வாசலில் ஊரின் பெரிய மனிதர்கள் அமர்ந்திருந்தார்கள். தெருவில் விரிக்கப்பட்டிருந்த ஓலைப்பாயில் ஒரு சிலர் அமர்ந்திருந்தார்கள். வீட்டுக்குள் பெண்களின் அழுகுரல்கள் கேட்டுக்கொண்டிருந்தது. தலைவாசலிலேயே தயங்கித் தயங்கி நின்றேன். உள்முற்றத்தைச் சுற்றிய வராந்தாக்களில் உறவினர்கள், பெண்கள் கூட்டமாய் அமர்ந்திருந்தார்கள். ”சும்மா உக்காந்திருக்காம ஆகவேண்டிய காரியங்களப் பாருங்கப்பா, புதுக்கோட்டைக்கு சொல்லி வுட்டாச்சா என்று கேட்டுக்கொண்டு மாமா வெளியே வந்தார்.
அப்பத்தாவின் அழுகுரல் கேட்கிறதா என்று மட்டுமே கவனித்துக்கொண்டிருந்தேன். தாத்தாவின் இழப்பை விட அப்பத்தாவின் மனநிலை பற்றியே எண்ணிக்கொண்டிருந்தேன். எப்படி போய் தாத்தாவின் முகத்தைப் பார்ப்பது, உடைந்து அழுதுவிடாமல் பார்த்துவிட்டு வந்துவிடமுடியுமா? தலையைக் குனிந்தவாறே உள்ளே சென்றேன். என்னைப்பார்த்ததும் அத்தை வந்து ஓவென்று கட்டிக்கொண்டு அழுதார். ”தாத்தாவை அனுப்பி வக்கிறதுக்குத்தான் வந்தியா ராசா” என்றழுதார். திக்கென்றிருந்தது. எல்லாரும் என்னையே பார்ப்பதுபோல் தோன்றவே அழுதுவிடாமல் அடக்கிக்கொண்டே, சலனமற்று வெள்ளைத்துணி சுற்றியிருந்த தாத்தாவின் முகத்தைப் பார்த்தேன். அன்றைய இரவு கயித்துக்கட்டிலில் படுத்து உறங்கிக்கொண்டிருப்பது போலவே இருந்தது. ஏற்கனவே தாத்தாவின் மரணத்தை பார்த்துவிட்டதுபோல சலனமற்றிருந்தேன்.
பொங்கிவந்த அழுகையை அடக்கிக்கொண்டே, கைகளால் முகத்தை மூடிக்கொண்டு விறுவிறுவென்று வெளியே வந்துவிட்டேன். நல்லடக்கம் செய்வதற்கான எல்லா சடங்குகளும் நடந்து முடிந்து, கடைசிநேரத்தில் தாத்தாவை வீட்டிலிருந்து தூக்கிக்கொண்டு செல்கையில் எழுந்த பெண்களின் அழுகையொலி பிரிவின் வலியை, தனித்துச் செல்லுதலின் அடங்காத் துயரை உச்சகதியில் உரைப்பது போலவே இருந்தது. ஒப்பாரிகளின் மூலம் எதுவாக இருக்கும்?. காலங்காலமாய் அடக்கி வைக்கப்பட்ட ஆறாத காயங்களைக் கொண்டிருப்பவர்களிடமிருந்துதான் இப்படி ஒரு ஓலம் எழமுடியுமா? ஆண்கள் யாரும் ஏன் இப்படி அழுவதே இல்லை? மனம் கேள்விகளில் தத்தளித்தது. நள்ளிரவின் கடலோசையைப் போன்றதொரு இரைச்சலில் மூழ்கிவிட்டிருந்தேன்.
அடக்கம் செய்துவிட்டு வந்து நெருங்கிய உறவினர்கள் சூழ அமர்ந்திருந்த அப்பத்தாவை பார்த்து விடைபெற அறைக்குள் சென்றேன். மற்றவர்கள் எல்லாரும் புறப்பட்டுச்சென்றிருந்தார்கள். வீடு அமைதியாக இருந்தது. அப்பத்தாவின் மடியில் விழுந்து ஓவென்று அழுதேன். அப்பத்தாதான் பதிமூன்று வருடமாய் என்னை வளர்த்த அன்னை. அப்பத்தா அழவேயில்லை “ராசா மாதிரி இருந்தாருப்பா ஒங்க தாத்தா, சீரோடையும் சிறப்போடையும் போய்ச்சேந்துட்டாரு, நீ நல்லாயிருக்கனும்னுதான் எப்பவும் நெனச்சாருப்பா, தனக்கு ஒரு கெட்டது நடக்குறதுக்கு முன்னாடி ஒனக்கு கலியாணம் பண்ணிவச்சிப் பாக்கனும்னு பண்ணிவச்சாருப்பா, நீ வந்து ஒன் தோள்ல தூக்கிட்டுப்போவனும்னு இருந்திருக்காரு, நீ குடுத்துவச்சவன்யா, சீதேவித்தனமா போயிட்டுவாப்பா” அப்பத்தாவின் தீர்க்கமான வார்த்தைகள் கண்ணீரைப் பெருநதியாய்ப் பெருக்கெடுக்க வைத்தது. நெத்தியில் முத்தமிட்டு, நீ நல்லாயிருக்கனும் ராசா” மௌனமாய் அழுதுகொண்டே விடைபெற்றுவந்தேன்.
எல்லாம் முடிந்து மதுரை வந்து சேர்ந்தாயிற்று. உடலும் மனமும் சிறகுபோல் எடையற்று உணர்ந்தேன். துக்கத்தின் அசதியில் வழியில் தூங்கிவிட்டிருந்தேன்.
காலையிலிருந்து தொடர்ச்சியான எண்ணங்களின் சுமை அயர்ச்சியைத் தந்துவிட்டிருந்தது. காலையில் பயணம் புறப்படவேண்டும். ஒருமாத விடுமுறையின் கடைசி நாள். பிரிவினை எண்ணி அழுதுகொண்டேயிருந்த ஹரிணியின் முகத்தைப் பார்க்கவியலவில்லை. நெஞ்சில் சாய்ந்து அழுதுகொண்டேயிருந்தாள். “என்னைய விட்டு போய்டாதீங்க” என்று புலம்பிக்கொண்டேயிருந்தாள். ஒருவேளை நான் மரணமடைந்துவிட்டேனோ என்று அஞ்சத்தொடங்கினேன். மரணமடைந்தவர்களுக்கு இறந்தவர்களின் அழுகுரல்கள் கேட்குமா? ஒருவேளை அழுகுரல் கேட்டாலும் அதை எப்படி அழுதுகொண்டிருப்பவர்களுக்குச் சொல்ல முடியும். தாத்தாவும் நாம் அழாமல் இருந்ததை தெரிந்துகொண்டிருப்பாரா? அவர்மீது பாசம் இல்லையென்று எண்ணியிருப்பாரா?
நான் உயிருடன்தான் இருக்கிறேனா? மரணித்துவிட்டேனா? ”என்னைய விட்டுப் போய்டாதீங்க” என்று ஏன் திரும்பத்திரும்ப சொல்லிக்கொண்டேயிருக்கிறாள். ஒருவேளை பிரிவின் வேதனையால் ஹரிணிக்கு மனநிலை குழம்பிவிட்டதா? குழப்பமாக இருந்தது. ஒரு கணம் துடித்து எழுந்தேன். அய்யோ..நான் உயிருடன் இருக்கிறேன் என்று எனக்கே உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டியிருந்தது. ஆறுதல் சொல்வதற்காகவும் ஆற்றுப்படுத்திக்கொள்வதற்காகவும் இறுக்கமாய் அணைத்து முத்தமிட்டேன். மூர்க்கமாய் அணைத்து முத்தமிட்டுக் கொண்டேயிருந்தேன். “நான் உயிரோடுதான் இருக்கிறேன் உன்னைவிட்டு போகமாட்டேன்” என எனக்குள் சொல்லிக்கொண்டேன். அழுது சோம்பிக்கிடந்தவளின் கால்களை இறுக்கிவைத்துக் கொண்டு மூர்க்கமாய் புணரத்தொடங்கினேன். ஹரிணியின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து தலையணையில் ஈரம்படரத்தொடங்கியிருந்தது. இருகைகளாலும் என் முகத்தை ஏந்தி மூர்க்கமாய் இயங்கிக்கொண்டிருந்த என்னை இமைக்காமல் உயிரற்ற உடலைப் பார்ப்பது போல் பார்த்துக்கொண்டேயிருந்தாள். சலனமேயில்லாமல் உயிரற்றுக் கிடந்தது உடல்.










